Thursday, 10 August 2017

காதலன் - The Lover - 4

முந்தைய பகுதி படிக்க

நமது கதைநாயகன் சுந்தர்க்கு தினசரி அட்டவணை மொத்தமாக மாறிப்போனது. காலை எழுந்து குளித்து கிளம்பி உற்சாகத்துடன் 23C பேருந்தை பிடிப்பதும், அந்த பெண்ணின் பின்னால் சுற்றுவதும். இவன் மட்டும் என்ன வித்தியாசமாக செய்து விட போகிறான்.

பெண்கள் எப்போதும் தங்களைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையும் அறிந்தே இருப்பார்கள்.

உற்சாகத்துடன் காலை பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கலானான் நம் சுந்தர்.

பள்ளி சிறுவர்கள் நெத்தியில் பொட்டும், முதுகில் பொதியுமாய் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

காலம் காலமாக நடத்துனர்கள் சொல்லும் அதே வசனம் "படில நிக்காத உள்ள வா", "சீட்டு வாங்காதவன் வாங்கிக்கோ ", போன்ற ஏக வசனங்களுடன் பேருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.

பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அவனது அன்றைய கடமை முடிந்து விடுவதில்லை. மாலை வந்து செல்வதும் கடமையின் ஒரு பங்கு.

பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரி வாசல் வரையில் அவள் பின்னால் சென்று விட்டு, தினம் தினம் ஏதோ சாதித்து விட்டது போல பெருமிதத்துடன் திரும்பி செல்வான்.

அன்றைக்கும் அதே தான். அப்படி அவன் திரும்புகையில் யாரோ கூப்பிடுவது போல தோன்ற, திரும்பி பார்த்தாள். ஆம் அவள் தான் அழைத்தாள்.

ஒரு பயமும் / பதட்டமும் தொற்றிக்கொண்டது.  அவள் இவன் அருகில் வந்து உள்ள வா, கேன்டீன்ல சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் அப்படின்னு சொன்னாள்.
இவனோ, பரவாயில்லை அப்படின்னு சொன்னான். அவள் அவன் கண்களில் ஒரு பார்வை பார்த்து கேட்டாள்.

அந்த பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள். பல்லாயிரம் அடி பள்ளத்தில் கிடக்கும் ஒருவனுக்கு ஒளியை கண்டது போல,
வெளியே சென்ற அப்பா வீடு திரும்பினால் குழந்தையின் குஷியைப் போல, அவன் மனம் துள்ளியது.

ஆனாலும் ஸ்டாண்ட் போட்ட சைக்கிளை 100கிமீ வேகத்தில் ஓட்டுவது போல ஒரு எண்ணம் அவனுக்கு. "ஆம், அவள் என்ன சொல்லப்போகிறாள் என்றே தெரியாமல் கற்பனையில் வேகமாய் எங்கே போகிறாய்?" என்று அவனுக்கு வெளியில் வந்து சொல்லி விட்டுச சென்றான் உள் மனம் என்ற சுந்தர்.

உள்ளே சென்றதும், விளையாட்டு மைதானத்துக்கு எதிரே இருக்கும் கேண்டீன் உள்ளே சென்று அமர்ந்தனர்.

விசாலமான அறை, பரபரப்பான மாணவர்கள், சில அதிகாரிகள், ஆசிரியர்கள் என்று அந்த கேண்டீன் பாகுபாடின்றி சேவை செய்து கொண்டிருந்தது. அந்த நீல நிற ஜன்னல் சட்டங்கள் வழி விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்த்தான் சுந்தர்.

"என்ன பண்றிங்க" என்று கேட்டாள் மீரா (ஆம் அவளுக்கு பெயர் வைத்தாகி விட்டது).

"நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் " என்று சொல்லி முடிக்கும் முன், "முடிச்சிட்டீங்களா?" என்று வினவினாள்.

அவளின் வேகத்துக்கு இவனால் ஈடு கொடுக்க முடியவில்லை.

"முடிச்சிட்டேன், வேலை தேடி வந்திருக்கேன்" என்றான்.

சிறு அமைதி, மீண்டும் அவள், "வேலை தேடி வடநாட்டுக்கு போகாம இங்க ஏன் வந்திங்க?"  என்றாள்.

"இங்க ஒன்னும் கிடைக்கலைனா அங்க தான் போகணும்.
இப்பதான் அகில இந்திய வானொலியில் நேர்காணல் முடிஞ்சிருக்கு, அதான் காத்திருக்கேன்" என்றான்.

"புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு?"மீரா கேட்டாள் .

அவனுக்கு அந்த பழக்கமே கிடையாது. ஆனாலும் சொல்லி வைப்போம் என்று இருக்கே என்றான்.

"எந்த எழுத்தாளர் புத்தகங்கள் படிப்பிங்க" என்றாள்.

இவனுக்கு சடடென்று தோன்றியது சுஜாதா தான். "சுஜாதா" என்று ஒரு வரியில் சொல்லி முடித்து வேற டாபிக் எடுக்க முயற்சிக்கிறான்.

"என்ன டிபார்ட்மெண்ட் படிக்கிறிங்க" என்றான்.

அவளுக்கும் இவன் டாபிக் மாற்ற முயற்சி செய்வது நன்றாகவே புரிந்து போகிறது. சிரித்துக் கொண்டே கம்ப்யுட்டர் என்று கூறிவிட்டு கம்பியூட்டரில் ஆர்வம் அதிகம் தான் என்றாலும் அதை விடவும், தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் அதிகம் என்றும் கூறுகிறாள்.

அவன் ஆர்வமாக "எனக்கும்தான் " அப்படின்னு சொல்லி முடிக்கும் முன் அவள் "அப்படி தெரியலையே" என்கிறாள். அவள் அப்படித்தான் எதுவானாலும் முகத்துக்கு முன் சொல்லிவிடுவாள்.

அவனிடம் "பெண் எழுத்தாளர்கள் யாராவது தெரியுமா?" என்று கேட்கிறாள். அவன் "இல்லை" என்கிறான்.

"கல்கி வார இதழில் பாரதி மகள் என்ற பெயரில் பெண் பிள்ளைகள் அப்படிங்கிற தொடர் கதை எழுதிட்டு இருக்கேன்" என்றாள்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கல்கியில் ஊர் பக்கம் பொன்னியின் செல்வன் தொடர் வந்த போது மற்றவர்கள் படித்ததை வேடிக்கை பார்த்திருக்கிறான் அவ்வளவு தான். இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் முதல் பென்ச் மாணவன் எல்லாம் புரிந்து விட்டதென தலையாட்டுவது போல தலையை ஆட்டினான்.

அவள் இவன் கண்களை பார்த்து "நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று தெரியும். அதை முடிந்தால் படித்து பாருங்கள்" என்று கூறிவிட்டு இவன் பதிலுக்கு காத்திராமல், வகுப்புக்கு நேரமாச்சு இன்னொரு நாள் பார்க்கலாம் என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டாள்.

ஏதோ ஒன்று அவளிடம் இவனை ஈர்த்தது. அப்போதைய கால கட்டத்தில் அவ்வளவு எளிதில் பெண்கள் இப்படி ஆண்களிடம் பேச மாட்டார்கள்.

ஆனால் இவள் மட்டும் மல்லிகை தோட்டத்தில் முளைத்த ரோஜா செடி போல வேறுபட்டவள் என்று தெளிவாக புரிந்து கொண்டான். அண்ணா பல்கலைக்கழகம் வாசலில் வந்து நின்ற பல்லவனில் ஏறினான்.

தொடரும்,
காதலுடன்
கருப்பசாமி பாண்டியன்.














Friday, 21 July 2017

காதலன் - The Lover - 3

முந்தைய பகுதி படிக்க 

மழை நாளுக்கு அடுத்த நாள், நல்ல இளவெயில்.  மரக்கிளைகளுக்கு ஊடாக கதிரவனின் ஒளிக்கீற்று அழகாய் வீச, அகில இந்திய வானொலி தனது 7மணி செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிருப்பதை எதிர் வீட்டு அண்ணன் முகச்சவரம் செய்து கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டான் நம் சுந்தர். இந்த முறை அறை நண்பர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான்.

நேற்றைய மழையில் தேங்கிய நீரை கவனமாய் தாவித் தாவிச் சென்றான். தொலைவில் உள்ள டீ கடையில் "காதலின் தீபமொன்று ஏற்றினாளே" பாடல் அகில இந்திய வானொலியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரிக்ஷா ஓட்டுபவர் உற்சாகமாக எம்ஜிஆர் பாடலை உற்சாகத்துடன் பாடிக்கொண்டே செல்கிறார்.
இன்றைய நாள் உற்சாகமாக இருப்பதை இவனால் உணரமுடிந்தது.

அவன் அந்த பேருந்துநிறுத்தத்தை அடைந்த நேரம் வானிலை அறிக்கை வாசிக்கப்பட்டது. இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்ற அந்த அறிவிப்பை அவன் கவனிக்காமல் இல்லை.

தூரத்தில் அந்த பேருந்து வருவதைக் கண்டவுடன் இவனது இதயம் 100கிமீ வேகத்தில் ஓட ஆரம்பித்தது. அதன் ஓட்டம் பேருந்தை விட வேகமாக ஓடி அதன் கடைசி இலக்கை அடைந்தே விட்டது.

பேருந்து இவனை நெருங்க நெருங்க இவனது இதயத்துடிப்பின் சத்தம் இவனுக்கே பலமாக கேட்க ஆரம்பிக்கிறது. அவள் பேருந்தினுள் இருப்பாளோ, என்ற பயம் அவனைத் தொற்றிக்கொண்டது. அவன் புத்திக்குள் சண்டை போட்டுக்கொள்கிறான், தைரியமாக அவளை திட்ட வேண்டும், இல்லை ஏன் அடிச்சிங்க என்றாவது கேட்டு விடவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறான். அந்தக் குழப்பம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.

பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறது. அவள் நேற்று நின்ற அதே இடத்தில் நிற்கிறாள். அவளது தோழிகள் அவனைப் பார்த்ததும் சிரிக்கிறார்கள். இவனோ அந்த பக்கம் ஏறாமல், முன்பக்கம் சென்று ஏறிக்கொண்டான். நிதானமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவள் எங்கே இறங்குகிறாளோ அங்கேயே இறங்கி கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.

இன்ஜினியரிங் கல்லூரி ஸ்டாப் என்று நடத்துனர் சத்தத்திற்கு ஒரு பெரிய கூட்டமே இறங்கியது. அவளும் இறங்கினாள். இவனும் இறங்கி அவள் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தான். அவளை எப்படி அழைப்பது என்றும் தெரியவில்லை. கை தட்டினான். இவளைத் தவிர மற்ற எல்லாரும் திரும்பி பார்த்தார்கள். இவளது தோழிகள் இவளிடம் சொன்னார்கள்.

அவள் அவனைத் திரும்பி பார்த்தாள்

அவனை நோக்கி நடக்கலானாள். அவனுக்கு வியர்க்க ஆரம்பிக்கிறது. திரும்பி போய்விடலாமா என்று கூட தோன்றியது. அவள் இவனிடம் வந்ததும் "I am Sorry, உங்க நிலைமை புரியாம, நான் அவசரப்பட்டு அடிச்சிட்டேன்" அப்படின்னு சொல்லி விட்டு இவன் பதிலுக்கு காத்திராமல் திரும்பி போய்விட்டாள்.

"சரிங்க இருக்கட்டும்ங்க" அப்படின்னு தலையை ஆட்டிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கிறான் நம்ம சுந்தர். அவளது தோழிகள் அவனைப் பார்த்து சிரிக்கின்றனர்.

இறுதியில் அவளின் அந்த கண்டுகொள்ளாமை, தைரியம் இவனுக்கு பிடிக்கிறது. அவனின் அப்பாவித்தனம் இவளுக்கு பிடித்துப்போகிறது. இருந்தாலும் இது அடுத்த நிலையை அடையுமா என்றெல்லாம் தெரியாது.

இவன் வீடு திரும்பும்முன் மழை கொட்ட ஆரம்பித்திருந்தது.

தொடரும்..

காதலுடன்,
கருப்பசாமி பாண்டியன்.






Wednesday, 19 July 2017

காதலன் - The Lover - 2

முந்தைய பகுதி படிக்க

நம் கதையின் 60வயது கதாநாயகன் சுந்தர் (பெயர் வைத்தாகி விட்டது), ஏன் இந்தியா விட்டு ஃபின்லாந்து சென்றார். அவரை துரத்தியது எது?

வேறென்ன காதல் தான். காதல் தான் ஒரு மனிதனை ஊர் கடத்தும், மாநிலம் கடத்தும், நாடு கடத்தும், ஏன் இந்த உலகை விட்டே கடத்தும் வல்லமை கொண்டதாயிற்றே.

இந்த சிகரெட் அட்டையில் "புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்" என்று போட்டிருக்கும். அதை படித்தும், புகை பிடிப்பவர்கள் போல, இந்த காதலால் ஏற்படும் இன்னல்களை அனுபவித்தும், கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அதில் விழுபவர்கள் பாக்கியவான்கள். ஆம் காதலின்றி இந்த உலகே சுற்றாதே. பிறகெப்படி அதற்கு எதிராய் எழுதுவது.

சரி கதைநாயகனைப் பற்றிய ஒரு அறிமுகம் தேவை. அவன் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள சாதாரண நகரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த பொறியியல் தேர்வு பெற்ற பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவன். குடும்பத்தில் ஒரே பிள்ளை.

சென்னையில் அவனுக்கு இருந்த ஒரே நண்பன் கிண்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறான். அவன் அவனது தினசரி செலவும் போக வீட்டிற்க்கு மாதாமாதம் ரூபாய் அனுப்ப வேண்டும். அதனால் அவனை நம்பி இவன் இருக்க முடியாது. வீட்டிலிருந்து வரும் போது ஐந்தாயிரம் ரூபாய் வாங்கி வந்திருந்தான். ஒரு சிறு அறையில் 6பேருடன் 7வது நபராக சேர்ந்தான்.

வந்த முதல் நாளே மாத பேருந்துச்சீட்டு வாங்கியாகி விட்டது.
அவனது அட்டவணை மிகவும் எளிது. காலை எழுந்து, தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் ஏதேனும் இருக்கும் அழைப்பு விளம்பரம் செய்தித்தாளில் பார்க்க வேண்டியது, அந்த கம்பெனிக்கு நேர்காணலுக்கு செல்வது.

இது ஏதோ வனவாசம் என்று நினைத்து விடவேண்டாம். இது எல்லா இளைஞர்களின் வாழ்விலும் அவர்களையும், உலகையும் புரிய வைக்கும் வாழ்வின் மிக முக்கிய பகுதி.

அந்த வாழ்வின் முக்கிய பகுதியின் ஒருநாள் காலை கிண்டியிலிருந்து திருவான்மியூரில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு நேர்காணலுக்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்க்கு சென்று கொண்டிருக்கிறான்.

அது ஒரு மழை நாள். சாலையில் மழைநீர் தேங்கி, வானம் பூமி இறங்கி நீரில் பிரதிபலிக்க. அந்த தேங்கிய நீரில் பேருந்து நகர்வது தெரிகிறது. அது 23C பேருந்து.

அதை ஓடி பிடித்து ஏறினான். படி அருகே நின்றிருந்த பெண்ணின் இடுப்பில் தவறுதலாக கை வைத்துவிட்டான்.

நீங்கள் எப்போதாவது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, கண் முன் பூச்சி வந்தால், கண்ணில் பூச்சி படும் முன், மூளை வேகமாக இயங்கி கண்களை மூடும் . அதை விட குறைந்த நேரத்துக்குள் அவனது கன்னத்தில் பளார் என்ற சத்தத்துடன் ஒரு அடி விழுந்தது. அவன் சற்றே தடுமாறி நடந்ததை ஒரு முறை ரீவைண்ட் பண்ணிக் கொள்கிறான். அவனது தவறு புரிகிறது. அந்த பெண்ணை ஏறெடுத்து பார்க்கிறான்.

மஞ்சள் நிறமும், நீலமும் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள் அவள். மிகச்சிறிய அணு அளவை விட சற்றே பெரிய பொட்டு அணிந்திருந்தாள். ஒரு நொடி கண்களைக் கண்டான், அதன் ஆழத்தில் பல ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தான். ஆம் பேருந்தில் இருந்து இறங்கி விட்டான்.

இவை அனைத்தும் கண் இமைக்கும் நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்தது.

பெண்ணிடம் பேசவே கூச்சப்படும் நம்  சுந்தர் எங்கே எதிர்த்து பேச ?

நடந்தவை அனைத்தையும் அவன் அறை நண்பன் ஒருவன் பார்த்துவிட்டான். சுந்தருக்கு தெரியாது அன்றைக்கு இரவுக்கு இவனுக்கு நடந்த நிகழ்வுதான் ஊறுகாய் என்று.

மாலை அறைக்கு வந்ததும் நண்பர்கள் அனைவரும் இதை வைத்து சுந்தரை கேலி செய்தனர். அதில் ஒருவன் சொன்னான் நீயும் பதிலுக்கு அடித்திருக்கலாம் என்று. உண்மையில் சுந்தருக்கு அந்தப் பெண் மீது கொஞ்சம் கூட கோபமில்லை. அந்த பெண்ணின் நிலையை நன்கே உணர்ந்திருந்தான்.

ஆனால் நண்பர்கள் சொல்லும்போது அவனுக்குள் ஒரு  எண்ணம் தோன்றலாயிற்று. பதிலுக்கு அறையா விட்டாலும், பேசி  இருக்க வேண்டும் என்று.  நண்பர்களிடமும் சொன்னான் நாளை அவள் அதே பேருந்தில் தானே வருவாள்,பார்த்துக் கொள்கிறேன் என்று.

தொடரும் ....

காதலுடன்,
கருப்பசாமி பாண்டியன்.

Monday, 17 July 2017

காதலன் - The Lover - 1



ஒரு விசாலமான ஜன்னல், பக்கத்தில் ஒரு பனிச்சறுக்கு வீரன் கையில் champagne குலுக்கும் படம் ஒட்டப்பட்டிருந்தது. 

அதன் கீழ் ஒரு மேஜை. ஜன்னல் வழிவரும் ஒளிக்கீற்று மேஜையில் வைத்திருந்த ஒரு ஜோடி விஸ்கி டம்ளர்கள் வழி பிரதிபலித்தது. 

அந்த நாடே சூரியனை எதிர்நோக்கி காத்திருந்தது. கோடைகாலம் அப்போதுதான் துவங்குகிறது. குழந்தைகளுக்கு விளையாட அதிக நேரம் கிடைக்கும். பெரியவர்களுக்கு சற்றே உலர்ந்த சூழல் தேவை மட்டுமே. 

அந்த மேஜையின் அருகில் ஒரு 60வயது மதிக்கதக்க முதியவர் அமர்ந்து சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தார்.

அந்த வீடு மரத்தால் ஆன வீடு. அனேகமாக இவரே இதை கட்டியிருக்கக்கூடும். ஆற்றங்கரையில், பார்த்த உடன் குடியிருக்க அழைக்கும் அந்தக் குடிலில் அவர் மட்டும்தான் வாழ்கிறார். 

அவரது தேவைகளை அவரே பூர்த்தி செய்யும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் பிறப்பால் இந்தியன். ஃபின்லாந்து சென்று சுமார் 32ஆண்டுகள் ஆகிறது. 

தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஃபின்லாந்து நாட்டிற்கு விருப்ப மாற்றம் கேட்டுச் சென்றார். அங்கு குடிமகன் அந்தஸ்த்து கிடைத்ததும் அந்த வேலையை உதறினார். தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், அவர் குடிமகன் அந்தஸ்த்து வாங்கத்தான் அங்கு சென்ற பின் அந்த வேலையில் ஒட்டிக்கொண்டிருந்தார். 

அவர் இந்தியாவிலிருந்து ஏன் ஃபின்லாந்துக்கு விருப்ப மாற்றம் கேட்டுச் சென்றார். ஃபின்லாந்தில் அப்படி என்ன அவரை ஈர்த்தது என்று சொல்வதை விட, இந்தியாவில் இருந்து அவரை துரத்தியது எது என்ற கேள்விகளுக்கு அடுத்த பாகத்தில் விடை காணலாம். 


காதலன் - 1.