Thursday, 10 August 2017

காதலன் - The Lover - 4

முந்தைய பகுதி படிக்க

நமது கதைநாயகன் சுந்தர்க்கு தினசரி அட்டவணை மொத்தமாக மாறிப்போனது. காலை எழுந்து குளித்து கிளம்பி உற்சாகத்துடன் 23C பேருந்தை பிடிப்பதும், அந்த பெண்ணின் பின்னால் சுற்றுவதும். இவன் மட்டும் என்ன வித்தியாசமாக செய்து விட போகிறான்.

பெண்கள் எப்போதும் தங்களைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையும் அறிந்தே இருப்பார்கள்.

உற்சாகத்துடன் காலை பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கலானான் நம் சுந்தர்.

பள்ளி சிறுவர்கள் நெத்தியில் பொட்டும், முதுகில் பொதியுமாய் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

காலம் காலமாக நடத்துனர்கள் சொல்லும் அதே வசனம் "படில நிக்காத உள்ள வா", "சீட்டு வாங்காதவன் வாங்கிக்கோ ", போன்ற ஏக வசனங்களுடன் பேருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.

பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அவனது அன்றைய கடமை முடிந்து விடுவதில்லை. மாலை வந்து செல்வதும் கடமையின் ஒரு பங்கு.

பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரி வாசல் வரையில் அவள் பின்னால் சென்று விட்டு, தினம் தினம் ஏதோ சாதித்து விட்டது போல பெருமிதத்துடன் திரும்பி செல்வான்.

அன்றைக்கும் அதே தான். அப்படி அவன் திரும்புகையில் யாரோ கூப்பிடுவது போல தோன்ற, திரும்பி பார்த்தாள். ஆம் அவள் தான் அழைத்தாள்.

ஒரு பயமும் / பதட்டமும் தொற்றிக்கொண்டது.  அவள் இவன் அருகில் வந்து உள்ள வா, கேன்டீன்ல சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் அப்படின்னு சொன்னாள்.
இவனோ, பரவாயில்லை அப்படின்னு சொன்னான். அவள் அவன் கண்களில் ஒரு பார்வை பார்த்து கேட்டாள்.

அந்த பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள். பல்லாயிரம் அடி பள்ளத்தில் கிடக்கும் ஒருவனுக்கு ஒளியை கண்டது போல,
வெளியே சென்ற அப்பா வீடு திரும்பினால் குழந்தையின் குஷியைப் போல, அவன் மனம் துள்ளியது.

ஆனாலும் ஸ்டாண்ட் போட்ட சைக்கிளை 100கிமீ வேகத்தில் ஓட்டுவது போல ஒரு எண்ணம் அவனுக்கு. "ஆம், அவள் என்ன சொல்லப்போகிறாள் என்றே தெரியாமல் கற்பனையில் வேகமாய் எங்கே போகிறாய்?" என்று அவனுக்கு வெளியில் வந்து சொல்லி விட்டுச சென்றான் உள் மனம் என்ற சுந்தர்.

உள்ளே சென்றதும், விளையாட்டு மைதானத்துக்கு எதிரே இருக்கும் கேண்டீன் உள்ளே சென்று அமர்ந்தனர்.

விசாலமான அறை, பரபரப்பான மாணவர்கள், சில அதிகாரிகள், ஆசிரியர்கள் என்று அந்த கேண்டீன் பாகுபாடின்றி சேவை செய்து கொண்டிருந்தது. அந்த நீல நிற ஜன்னல் சட்டங்கள் வழி விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்த்தான் சுந்தர்.

"என்ன பண்றிங்க" என்று கேட்டாள் மீரா (ஆம் அவளுக்கு பெயர் வைத்தாகி விட்டது).

"நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் " என்று சொல்லி முடிக்கும் முன், "முடிச்சிட்டீங்களா?" என்று வினவினாள்.

அவளின் வேகத்துக்கு இவனால் ஈடு கொடுக்க முடியவில்லை.

"முடிச்சிட்டேன், வேலை தேடி வந்திருக்கேன்" என்றான்.

சிறு அமைதி, மீண்டும் அவள், "வேலை தேடி வடநாட்டுக்கு போகாம இங்க ஏன் வந்திங்க?"  என்றாள்.

"இங்க ஒன்னும் கிடைக்கலைனா அங்க தான் போகணும்.
இப்பதான் அகில இந்திய வானொலியில் நேர்காணல் முடிஞ்சிருக்கு, அதான் காத்திருக்கேன்" என்றான்.

"புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு?"மீரா கேட்டாள் .

அவனுக்கு அந்த பழக்கமே கிடையாது. ஆனாலும் சொல்லி வைப்போம் என்று இருக்கே என்றான்.

"எந்த எழுத்தாளர் புத்தகங்கள் படிப்பிங்க" என்றாள்.

இவனுக்கு சடடென்று தோன்றியது சுஜாதா தான். "சுஜாதா" என்று ஒரு வரியில் சொல்லி முடித்து வேற டாபிக் எடுக்க முயற்சிக்கிறான்.

"என்ன டிபார்ட்மெண்ட் படிக்கிறிங்க" என்றான்.

அவளுக்கும் இவன் டாபிக் மாற்ற முயற்சி செய்வது நன்றாகவே புரிந்து போகிறது. சிரித்துக் கொண்டே கம்ப்யுட்டர் என்று கூறிவிட்டு கம்பியூட்டரில் ஆர்வம் அதிகம் தான் என்றாலும் அதை விடவும், தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் அதிகம் என்றும் கூறுகிறாள்.

அவன் ஆர்வமாக "எனக்கும்தான் " அப்படின்னு சொல்லி முடிக்கும் முன் அவள் "அப்படி தெரியலையே" என்கிறாள். அவள் அப்படித்தான் எதுவானாலும் முகத்துக்கு முன் சொல்லிவிடுவாள்.

அவனிடம் "பெண் எழுத்தாளர்கள் யாராவது தெரியுமா?" என்று கேட்கிறாள். அவன் "இல்லை" என்கிறான்.

"கல்கி வார இதழில் பாரதி மகள் என்ற பெயரில் பெண் பிள்ளைகள் அப்படிங்கிற தொடர் கதை எழுதிட்டு இருக்கேன்" என்றாள்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கல்கியில் ஊர் பக்கம் பொன்னியின் செல்வன் தொடர் வந்த போது மற்றவர்கள் படித்ததை வேடிக்கை பார்த்திருக்கிறான் அவ்வளவு தான். இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் முதல் பென்ச் மாணவன் எல்லாம் புரிந்து விட்டதென தலையாட்டுவது போல தலையை ஆட்டினான்.

அவள் இவன் கண்களை பார்த்து "நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று தெரியும். அதை முடிந்தால் படித்து பாருங்கள்" என்று கூறிவிட்டு இவன் பதிலுக்கு காத்திராமல், வகுப்புக்கு நேரமாச்சு இன்னொரு நாள் பார்க்கலாம் என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டாள்.

ஏதோ ஒன்று அவளிடம் இவனை ஈர்த்தது. அப்போதைய கால கட்டத்தில் அவ்வளவு எளிதில் பெண்கள் இப்படி ஆண்களிடம் பேச மாட்டார்கள்.

ஆனால் இவள் மட்டும் மல்லிகை தோட்டத்தில் முளைத்த ரோஜா செடி போல வேறுபட்டவள் என்று தெளிவாக புரிந்து கொண்டான். அண்ணா பல்கலைக்கழகம் வாசலில் வந்து நின்ற பல்லவனில் ஏறினான்.

தொடரும்,
காதலுடன்
கருப்பசாமி பாண்டியன்.














No comments:

Post a Comment